இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவே இருக்கிறது. இதில் கடைசியாக சேர்ந்திருப்பது, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியிருப்பது. பி,சி.சி.ஐ.யின் இந்த செயல் ஐ,பி.எல் தொடரின் தோல்வியை ரசிகர்களுக்கு வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.
நஷ்டத்தை தாங்க முடியாத டெக்கன் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம், அணியை விற்பதாக அறிவித்தது. இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.100 கோடிக்கான உத்திரவாதம் அளிக்கத் தவறியதற்க்காக
இந்த அணியை நீக்க பி.சி.சி.ஐ க்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியக் கிரிக்கெட் வாரியம், வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் மூலமாகவே அணியை நீக்கிவிட்டது. இந்த அணிக்கு பதிலாக புதிய அணியை உருவாக்கும் முடிவில் இருக்கிறது.
பி.சி.சி.ஐ. யின் தடைக்கு ஆளாகும் மூன்றாவது அணி இது. இதற்கு முன்பு புனே மற்றும் கொச்சி அணிகளோடு மோதி அதனை தடை செய்திருக்கிறது. இதில் புனே அணியுடன் மட்டும் (அதன் உரிமையாளார்கள் இந்திய தேசிய அணியுடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பிறகு) சமரசம் செய்துகொண்டது. கொச்சி அணி கலைக்கப்பட்டு, அதன் வீர்ர்கள் மற்ற அணிகளில் ஆட அனுமதிக்கப்பட்டனர்.
ஐ.பி.எல். போட்டிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்கதையாகி வரக் காரணமென்ன? இன்னும் எத்தனை அணிகள் இந்த நிலைக்கு ஆளாகப்போகின்றன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் முன் ஐ.பி.எல் தொடர் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு வேண்டும்.
ஐ.பி.எல் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிரிக்கெட் அணிகளுக்கான உரிமையை ஏலம் விட்டு அப்படி உருவாக்கப்பட்ட அணிகளுக்கான வீரர்களையும் ஏலத்தின் மூலம் அளித்து, அந்த அணிகளுக்கிடையே நடத்தப்படும் போட்டிகள்தான் இந்த ஐ.பி.எல் தொடர்.
இப்படி உருவாக்கப்பட்ட அணிகள் அவை அமைந்திருக்கும்,
நாட்டின் பகுதியை, ஊரை வைத்து அடையாளம் காணப்பட்டாலும், இந்த ஒவ்வொரு அணியும் ஒரு தனிப்பட்ட
விளையாட்டுக் கழகமே. அதாவது cricket club. இவை முற்றிலும் தனியார் அமைப்புகள் போன்றவையே.
இந்த முறை கிரிக்கெட்டில் புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. கால்பந்தாட்டத்தில் இது மாதிரியான
அணிகளும் தொடர்களும் பல காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த கால்பந்துத் தொடர்களும் பல ஆண்டுகளாக
வெற்றிகரமாக ரசிகர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளைப் பார்த்து உருவாக்கப்பட்ட
தொடர் தான் ஐ.பி.எல்.
வெற்றிகரமாக என்று சொல்லும்போது வர்த்தக
ரீதியாகவும் இந்தத் தொடர்கள் லாபகரமாக இருக்கின்றன என்றே சொல்லலாம். அப்படியிருக்கையில் ஏன் இதனைப் பார்த்துத்
தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மற்றும் அதிலுள்ள அணிகள் மட்டும் நொண்டியடிக்கின்றன?
இதற்கு பதில் சொல்லும் முன், நாம் கவனிக்க வேண்டியது. இந்தத் தொடர்தான் லாபகரமாக நடந்துகொண்டிருக்கிறது
என்று சொன்னேன். அதில் பங்கேற்கும் அணிகள் அணைத்தும் லாபத்தில் செழிக்கின்றன என்று சொல்லவில்லை. ஆம். இந்த அணிகளுக்கும் பணப் பிரச்சைனைகளும், நிதி நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எந்த அணிகள் நீக்கப்படுவதோ
கலைக்கப்படுவதோ அல்லது தடை செய்யப்படுவதோ இல்லை. இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க அந்த நாட்டு கால்பந்து
சங்கங்களே சட்டப்பூர்வமான நடைமுறைகளை கையாள்கின்றன.
அதாவது, இப்படி நிதி நெருக்கடியை சந்திக்கும் அணிகளின் விளையாட்டோ
வீரர்களோ பாதிக்கபடாத அளவுக்கு நிதி நிர்வாக வல்லுனர்களும், அறிஞர்களும் அந்த அணி நிதிநெருக்கடியிலிருந்து
மீள்வதற்க்கான வழிகளை ஆராய்வார்கள். ஒரு வேளை வழி கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அந்த அணியை சட்டப்பூர்வமாக
கலைத்துவிட்டு புதிய அணியாக அதே வீரர்களோடு மீண்டும் உருவாக்க கால்பந்து அமைப்புகளே
உதவுகிறது. இதன் மூலம் அந்த அணியின் வீரர்களும்
பாதிக்கப்பட மாட்டார்கள் அதே சமயம் போட்டிகளிளும் அந்த அணியின் கவனம் சிதறாமல் இருக்கும். அந்த அணியின் ரசிகர் வட்டமும் ஆரோக்கியமாக
இருக்கும்.
இது போன்ற செயல்களில் அந்த அணியின்
ரசிகர்களின் பங்கு பெரிதும் இருக்கிறது. பல சமயங்களில் ஒரு அணி நிதிநெருக்கடியில் சிக்கி கலைக்கப்படும்
அபாயம் வரும்போது அந்த அணியின் ரசிகர்கள் நிதி திரட்டி அந்த அணியில் முதலீடு செய்து உதவியிருக்கின்றனர். இப்படிபட்ட ரசிகர்களால் அந்த அணி நிர்வாகமே எற்றுக்கொள்ளப்பட்டு
நடத்தபட்டிருக்கிறது.
இதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்தின்
பிரிஸ்டால் சிட்டி என்ற கால்பந்து அணி 1982 ல் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து
கலைக்கப்படும் நிலை உருவானது. அப்போது அந்த அணியின் தீவிர ரசிகரும் அந்தப் பகுதியின்
முக்கிய தொழிலதிபருமான டெரின் காலர் என்பவர் மேலும் சில ரசிகர்களின் உதவியோடு அந்த
அணியை எடுத்து நடத்த விருப்பம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சட்டப்பூர்வமாக அந்த
அணி கலைக்கப்பட்டு, அதே வீரர்களோடு புதிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. அந்த நிர்வாகம்,
மேலும் பல ரசிகர்களுக்கு அணியின் பங்குகளை விற்று அதன் மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு
பழைய அணியின் மைதானம் மற்றும் கால்பந்துத் தொடரில் பெற்றிருந்த உரிமை போன்றவற்றை வாங்கிவிட்டது.
இந்த அனுகுமுறையால் யாருக்கும் பாதிப்பின்றி அந்த நிதிநெருக்கடியிலிருந்து மீண்டு புதிய
அணியாக அதே சமயம் பழைய அணியின் ரசிகர்களையும் இழக்காமல் உருவாகியிருக்கிறது.
கால்பந்தாட்டத்தில் இப்படிப் பல அணிகள்
நிதி நெருக்கடிகளில் சிக்கி மீண்டு வந்திருக்கின்றன. இதில் அந்த கால்பந்து அமைப்புகளின்
அனுகுமுறைகள் தெளிவாக இருப்பதே காரணம். ஆனால் இங்கு கிரிக்கெட் வாரியம் பல தவறுகளைச்
செய்கிறது. முதலில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க்கும் அணிகளை ஏலம் விடும் முறையே தவறானது.
இப்படி ஏலம் விடும்போது அந்த அணியினை வாங்குபவர்களுக்கு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதே
நோக்கமாக இருக்கும்.
இதற்கு பதிலாக, தனிப்பட்ட கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் அணியைத்
தொடங்க அனுமதித்து, அவை தொடரில் பங்கேற்பதற்க்கு மட்டும் குறிப்பிட்ட தொகையையும், விதிமுறைகளையும்
விதித்து அவற்றை பூர்த்திசெய்யும் அணிகள் மட்டும் தொடரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கலாம்.
வீரர்களை மட்டும் ஏலம் மூலம் வழங்கலாம். அல்லது வீரர்கள் விருப்பட்ட அணிகளில் விளையாட
அனுமதிக்கலாம். அந்த வீரர்களுக்கான ஊதியம், அணி நிர்வாகம் மற்றும் அந்த வீரரால் தீர்மானிக்கப்படலாம்.
ஒவ்வொரு வீரருக்கும் குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச ஊதியம் என்ன என்பதை மட்டும் கிரிக்கெட்
வாரியம் நியமிக்கலாம்.
இப்படிப்பட்ட நடைமுறை மூலம் அந்த அணிகளுக்கு
தொடரை வெல்லும் நோக்கம் மட்டுமே இருக்கும் லாபமோ வருமானமோ இரண்டாம் பட்சமாகத் தான்
தெரியும். மேலும் புதிய வீரர்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.
இந்தியக் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல,
சர்வதேச கிரிக்கெட் சங்கமும் கால்பந்து அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது. அவற்றையெல்லாம் உணர்ந்தால்தான் கால்பந்து ஏன் உலகின் பிரபலமான, மற்றும்
அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள் முடியும்.
சந்தர்பம் கிடைத்தால் அதையும் எழுதுகிறேன்.
கிரிக்கெட் சங்கங்கள் கற்றுக்கொள்ளத்
தவறினால் இதுபோல் பல அணிகளும் நிதிநெருக்கடியால் கலைக்கப்படும். பிறகு ஐ.பி.எல் தொடர்
மாபெரும் தோல்வியாக முடியும்.