அன்னிய நேரடி முதலீடு – இந்திய தேசத்தின் பொருளாதார மந்த
நிலையை சீர்படுத்த மத்திய அரசு வகுத்திருக்கும் புத்திசாலித்தமான உபாயம். இந்தியாவைக்
காப்பாற்ற இதைவிட்டால் வேறு வழியேயில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அணைவரும் முழங்குகிறார்கள்.
நாடு முழுவதும் இந்த திட்டதிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றது.
மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை ஆதரிப்பதும் அளித்து வந்த ஆதரவை வாபஸ்
வாங்குவதுமாக இந்திய அரசியல் களம் ஒவ்வொரு நாளும் பரப்பாக இருக்கிறது.
இத்தனை சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அன்னிய நேரடி முதலீடு என்பது
என்ன? இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக நுழைந்து சில்லரை
வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
அதாவது அவர்கள் பொருட்களை அவர்களே இங்கு நேரடியாக விற்பனை
செய்யலாம். உதாரனமாக பல வெளிநாட்டுக் கார் கம்பெனிகளின் தொழிற்சாலைகள் இந்தியாவில்
இருக்கிறது. இந்த தொழிர்சாலைகளில் தயாரிக்கப்படும் வாகனங்களை இந்திய சில்லரை வர்த்தகர்கள்
அதாவது கார் ஷோரூம் அதிபர்கள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள். இதிலும்
ஒரு வர்த்தகர் குறிப்பிட்ட மண்டலத்திற்குள் மட்டுமே விற்பனை செய்யும் உரிமை பெற்றிருப்பார்.
இந்த கட்டமைப்பில், ஒரு வெளிநாட்டு தொழிற்ச்சாலையில் பணிபுரியும்
ஊழியர்கள், அதனை வாங்கி விற்கும் வனிகர், வாடிக்கையாளர் என்று அனைவரும் இந்தியர்களாக
இருக்கிறார்கள்.
இப்போது மத்திய அரசு பரிந்துரைக்கும் அன்னிய நேரடி முதலீடு
செயல்படுத்தப்படுமானால் இதே நிலை எப்படி இருக்கும்?
வெளிநாட்டு கார்தொழிற்ச்சாலைகளின் ஊழியர்கள் இந்தியர்கள்.
அங்கு தயாரிக்கப்படும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் வெளிநாட்டவர்.
அந்த கார்களை வாங்குவது இந்திய மக்கள்.
அதாவது ஒரு காரை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் வெளி
நாட்டவர். அங்கு பணிபுரிவதும் அதனை வாங்குவதும் இந்தியர்கள். இந்த நிலையை எங்கோ கேள்விப்பட்டதுபோல்
இருக்கிறதா?
கிட்டத்தட்ட 300 ஆண்டுகாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் இப்படித்தான்
இருந்தோம். நமது நிலத்தில் விளையும் பொருட்களையும் கொடுத்துவிட்டு அவர்களுக்குக் கப்பமும்
கட்டிக்கொண்டிருந்தோம். இதே நிலையைத்தான் மீண்டும் ஏற்படுத்தப்பபோகிறார்கள். இந்தியக்
குடியரசின் மகத்தான சாதனை இது.
நம் நாட்டினுடைய எதிர்காலத்தையே சீர்குலைக்கக்கூடிய இந்தத்
திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது?
இதற்கு பதில் நம் நாட்டு சூழ்நிலையைப் பொருத்தது அல்ல. அமெரிக்காவின்
பொருளாதார மற்றும் அரசியல் நிலையை ஒட்டியே இந்தியாவில் இந்த திட்டதிற்க்கான செயல்பாடுகள்
தீவிரமாக இருக்கின்றன.
அமெரிக்க பொருளாதார நிலை நம்மை விட மோசம். வரலாறு கானாத அளவு
வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலும் விரைவில் வரவிருப்பதால் ஒபாமா
ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்ட ஒபாமாவின் அரசு
வகுத்திருக்கும் திட்டம்தான் இந்தியச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் நேரடி சில்லரை
வர்த்தகம்.அதாவது அவர்களது பொருட்களை நம் சந்தையில் விற்பதன் மூலம் அவர்களது சந்தையையும்
லாபத்தையும் பெருக்கிகொள்ளலாம்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இதற்காகத்தான் இந்திய
அரசாங்கம் இவ்வளவு மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் கூட சகித்துக்கொள்ளாலாம். ஆனால் இந்திய அரசு
இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் என்று சொல்பவைதான் மக்களை ஏமாற்றுவதாக
இருக்கிறது.
அன்னிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக சில்லரை வர்த்தகம்
செய்தால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை அதிகமாகக் கிடைக்கும் என்பது அர்சாங்கத்தின்
வாதம். காரணம் இந்திய விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்ய
அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. அதனால் அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிக கொள்முதல்
விலை கிடைக்கும். நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தலைசிறந்த பொருளாதார நிபுனர்களால்
நடத்தப்படும் இந்திய அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது.
இந்த திட்டத்தின் மற்றொரு பயனாக சொல்லப்படுவது இந்திய வாடிக்கையாளார்களுக்கு
பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது. இது மேலே சொன்ன கருத்துக்கு முற்றிலும்
முரனானது. ஒரு பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து அதையே குறைந்த விலைக்கு விற்க
அந்த நிறுவனங்கள் என்ன மூடர்களா?
விவசாயப் பொருட்களின் நிலை இப்படியென்றால் மற்ற பொருட்களின்
நிலையில் பெரிய வித்தியாசமில்லை. மிகப்பெரிய பணபலம் கொண்ட இந்த நிறுவனங்கள், எந்தப்
பொருளையும் அதிக எண்ணிக்கையில் மொத்தமாக கொள்முதல் செய்யும் வலிமையை பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட மொத்தக் கொள்முதல் செய்யும்பொழுது, பொருட்களின் விலையும் மற்ற வர்த்தக
நிறுவனங்களுக்குக் கிடைப்பதைவிட மிகக்குறைவாக இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைத்துவிடுகின்றன.
உதாரணமாக, ஒரு இந்திய வர்த்தகர், ஒரு கம்பெனியின் சோப் ஒன்றை
30 ரூபாய்க்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சோப்பின் சந்தை விலை 45 ரூபாய்
என்று அதன் உற்பத்தியாளர்களால் நிர்னயிக்கப்பட்டிருக்கிறது. நம் வர்த்தகர் இந்த சோப்பை
ரூ.30 க்கு வாங்கி 45 ரூபாய்க்கு விற்றால் அவருக்குக் கிடைக்கும் லாபம், ஒரு சோப்பிற்கு
ரூ.15. இவருக்கு சலுகையாக அந்த சோப்பைத் தயாரிக்கும் கம்பெனி அதிகபட்ச்சமாக ஒரு சோப்பிற்க்கு
5 அல்லது 10 சதவிகிதம் தள்ளுபடி தரும். அதாவது ரூ.3 அல்லது 6 குறைத்துக் கொடுக்கும்.
இவரது கொள்முதல் அளவு அவரது சந்தையின் தேவையைப் பொருத்து இருக்கும். 100 அல்லது
200 என்ற எண்ணிக்கையிலேயே கொள்முதல் செய்வார்.
ஆனால் இதே வர்த்தகத்தில் அன்னிய நிருவனங்கள் நுழையும்போது
என்ன நடக்கும்? நம் நாட்டு வனிகர்கள் 100. 200 என்று கொள்முதல் செய்யும் பொருட்களை
இந்த நிறுவனங்கள் மொத்தமாக ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்யும். இத்தைகைய மொத்தக் கொள்முதல்
செய்யும்பொழுது உற்பத்தியாளர்களும் அதிகமான சலுகைகள் கொடுப்பார்கள். அதாவது, மேலே சொன்ன
அதே சோப்பு தயாரிக்கும் கம்பெனி இந்த நிறுவனங்களுக்கு ஒரு சோப்பை ரூ.20 என்ற விலையில்
கொடுக்கும். இதனால் அந்த நிறுவனதுக்குக் லாபம் குறைந்தாலும், 10 இந்திய வனிகர்களிடம்
செய்ய வேண்டிய வியாபாரத்தை ஒரேயொரு நிறுவனத்திடம் செய்துவிடுகிறார். எப்படிப்பார்த்தலும்
இந்த உற்பத்தியாளருக்கு லாபம்தான்.
இப்படி உள்நாட்டு வர்ததகர்களை விட குறைந்த விலைக்கு பொருட்களை
வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ரூ.45 க்கு விற்க்கப்படும் அதே சோப்பை, இவர்கள் ரூ.40
க்கு விற்பார்கள். இதில் இந்திய நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட முடியாது.
இதனால் இந்திய மக்களுக்கு லாபம்தானே? பொருட்கள் மலிவாகக்
கிடைக்கின்றன என்று சொல்பவர்கள் அவசரப்படாதீர்கள்.
வந்த புதிதில் இப்படி குறைவாகக் கொடுத்தாலும், நாட்கள் செல்லச்செல்ல
இவர்களது சந்தை பெருகும்பொழுது இவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை உருவாகிவிடாதா?
இவர்களே உற்ப்பத்தியிலும் இறங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
இவையெல்லாம் மேம்போக்காக பார்க்ககும்போது தெரிபவைதான். இந்த
திட்டத்தை செயல்படுத்தும்பொழுது இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களும் பாதிப்புகளும் ஏற்படும்.
இத்தகைய அபாயகரமானதொரு திட்டத்தை, இந்தியாவின் எதிர்காலத்தையே
சீர்குலைக்கக்கூடியவொரு முயற்சியைத்தான் இந்திய அரசாங்கம் செயல்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கிறது.
இனி இந்த விவகாரத்தின் முடிவு மக்கள் கையிலிருக்கிறது. இந்த
மக்களை மீறி அரசு இதனை அமல்படுத்துமேயானால், அதுவே இந்தியாவின் வீழ்சிக்குத் தொடக்கப்
புள்ளியாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக