banner

செவ்வாய், 16 அக்டோபர், 2012

விளையாட்டு வினையாகிறது


இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவே இருக்கிறது. இதில் கடைசியாக சேர்ந்திருப்பது, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியிருப்பது. பி,சி.சி..யின் இந்த செயல் ,பி.எல் தொடரின் தோல்வியை ரசிகர்களுக்கு வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.

நஷ்டத்தை தாங்க முடியாத டெக்கன் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம், அணியை விற்பதாக அறிவித்தது. இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.100 கோடிக்கான உத்திரவாதம் அளிக்கத் தவறியதற்க்காக இந்த அணியை நீக்க பி.சி.சி.ஐ க்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியக் கிரிக்கெட் வாரியம், வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் மூலமாகவே அணியை நீக்கிவிட்டது. இந்த அணிக்கு பதிலாக புதிய அணியை உருவாக்கும் முடிவில் இருக்கிறது.

பி.சி.சி.. யின் தடைக்கு ஆளாகும் மூன்றாவது அணி இது. இதற்கு முன்பு புனே மற்றும் கொச்சி அணிகளோடு மோதி அதனை தடை செய்திருக்கிறது. இதில் புனே அணியுடன் மட்டும் (அதன் உரிமையாளார்கள் இந்திய தேசிய அணியுடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பிறகு) சமரசம் செய்துகொண்டது. கொச்சி அணி கலைக்கப்பட்டு, அதன் வீர்ர்கள் மற்ற அணிகளில் ஆட அனுமதிக்கப்பட்டனர்.

.பி.எல். போட்டிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்கதையாகி வரக் காரணமென்ன? இன்னும் எத்தனை அணிகள் இந்த நிலைக்கு ஆளாகப்போகின்றன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் முன் .பி.எல் தொடர் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு வேண்டும்.

.பி.எல் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிரிக்கெட் அணிகளுக்கான உரிமையை ஏலம் விட்டு அப்படி உருவாக்கப்பட்ட அணிகளுக்கான வீரர்களையும் ஏலத்தின் மூலம் அளித்து, அந்த அணிகளுக்கிடையே நடத்தப்படும் போட்டிகள்தான் இந்த ஐ.பி.எல் தொடர்.
இப்படி உருவாக்கப்பட்ட அணிகள் அவை அமைந்திருக்கும், நாட்டின் பகுதியை, ஊரை வைத்து அடையாளம் காணப்பட்டாலும், இந்த ஒவ்வொரு அணியும் ஒரு தனிப்பட்ட விளையாட்டுக் கழகமே. அதாவது cricket club. இவை முற்றிலும் தனியார் அமைப்புகள் போன்றவையே.

இந்த முறை கிரிக்கெட்டில் புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. கால்பந்தாட்டத்தில் இது மாதிரியான அணிகளும் தொடர்களும் பல காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த கால்பந்துத் தொடர்களும் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ரசிகர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளைப் பார்த்து உருவாக்கப்பட்ட தொடர் தான் ஐ.பி.எல்.

வெற்றிகரமாக என்று சொல்லும்போது வர்த்தக ரீதியாகவும் இந்தத் தொடர்கள் லாபகரமாக இருக்கின்றன என்றே சொல்லலாம். அப்படியிருக்கையில் ஏன் இதனைப் பார்த்துத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மற்றும் அதிலுள்ள அணிகள் மட்டும் நொண்டியடிக்கின்றன?

இதற்கு பதில் சொல்லும் முன், நாம் கவனிக்க வேண்டியது. இந்தத் தொடர்தான் லாபகரமாக நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னேன். அதில் பங்கேற்கும் அணிகள் அணைத்தும் லாபத்தில் செழிக்கின்றன என்று சொல்லவில்லை. ஆம். இந்த அணிகளுக்கும் பணப் பிரச்சைனைகளும், நிதி நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எந்த அணிகள் நீக்கப்படுவதோ கலைக்கப்படுவதோ அல்லது தடை செய்யப்படுவதோ இல்லை. இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க அந்த நாட்டு கால்பந்து சங்கங்களே சட்டப்பூர்வமான நடைமுறைகளை கையாள்கின்றன.

அதாவது, இப்படி நிதி நெருக்கடியை சந்திக்கும் அணிகளின் விளையாட்டோ வீரர்களோ பாதிக்கபடாத அளவுக்கு நிதி நிர்வாக வல்லுனர்களும், அறிஞர்களும் அந்த அணி நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்க்கான வழிகளை ஆராய்வார்கள். ஒரு வேளை வழி கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அந்த அணியை சட்டப்பூர்வமாக கலைத்துவிட்டு புதிய அணியாக அதே வீரர்களோடு மீண்டும் உருவாக்க கால்பந்து அமைப்புகளே உதவுகிறது.  இதன் மூலம் அந்த அணியின் வீரர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் அதே சமயம் போட்டிகளிளும் அந்த அணியின் கவனம் சிதறாமல் இருக்கும். அந்த அணியின் ரசிகர் வட்டமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இது போன்ற செயல்களில் அந்த அணியின் ரசிகர்களின் பங்கு பெரிதும் இருக்கிறது. பல சமயங்களில் ஒரு அணி நிதிநெருக்கடியில் சிக்கி கலைக்கப்படும் அபாயம் வரும்போது அந்த அணியின் ரசிகர்கள் நிதி திரட்டி அந்த அணியில் முதலீடு செய்து உதவியிருக்கின்றனர். இப்படிபட்ட ரசிகர்களால் அந்த அணி நிர்வாகமே எற்றுக்கொள்ளப்பட்டு நடத்தபட்டிருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்தின் பிரிஸ்டால் சிட்டி என்ற கால்பந்து அணி 1982 ல் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து கலைக்கப்படும் நிலை உருவானது. அப்போது அந்த அணியின் தீவிர ரசிகரும் அந்தப் பகுதியின் முக்கிய தொழிலதிபருமான டெரின் காலர் என்பவர் மேலும் சில ரசிகர்களின் உதவியோடு அந்த அணியை எடுத்து நடத்த விருப்பம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சட்டப்பூர்வமாக அந்த அணி கலைக்கப்பட்டு, அதே வீரர்களோடு புதிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. அந்த நிர்வாகம், மேலும் பல ரசிகர்களுக்கு அணியின் பங்குகளை விற்று அதன் மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு பழைய அணியின் மைதானம் மற்றும் கால்பந்துத் தொடரில் பெற்றிருந்த உரிமை போன்றவற்றை வாங்கிவிட்டது. இந்த அனுகுமுறையால் யாருக்கும் பாதிப்பின்றி அந்த நிதிநெருக்கடியிலிருந்து மீண்டு புதிய அணியாக அதே சமயம் பழைய அணியின் ரசிகர்களையும் இழக்காமல் உருவாகியிருக்கிறது.

கால்பந்தாட்டத்தில் இப்படிப் பல அணிகள் நிதி நெருக்கடிகளில் சிக்கி மீண்டு வந்திருக்கின்றன. இதில் அந்த கால்பந்து அமைப்புகளின் அனுகுமுறைகள் தெளிவாக இருப்பதே காரணம். ஆனால் இங்கு கிரிக்கெட் வாரியம் பல தவறுகளைச் செய்கிறது. முதலில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க்கும் அணிகளை ஏலம் விடும் முறையே தவறானது. இப்படி ஏலம் விடும்போது அந்த அணியினை வாங்குபவர்களுக்கு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாக இருக்கும்.

இதற்கு பதிலாக, தனிப்பட்ட கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் அணியைத் தொடங்க அனுமதித்து, அவை தொடரில் பங்கேற்பதற்க்கு மட்டும் குறிப்பிட்ட தொகையையும், விதிமுறைகளையும் விதித்து அவற்றை பூர்த்திசெய்யும் அணிகள் மட்டும் தொடரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கலாம். வீரர்களை மட்டும் ஏலம் மூலம் வழங்கலாம். அல்லது வீரர்கள் விருப்பட்ட அணிகளில் விளையாட அனுமதிக்கலாம். அந்த வீரர்களுக்கான ஊதியம், அணி நிர்வாகம் மற்றும் அந்த வீரரால் தீர்மானிக்கப்படலாம். ஒவ்வொரு வீரருக்கும் குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச ஊதியம் என்ன என்பதை மட்டும் கிரிக்கெட் வாரியம் நியமிக்கலாம்.
இப்படிப்பட்ட நடைமுறை மூலம் அந்த அணிகளுக்கு தொடரை வெல்லும் நோக்கம் மட்டுமே இருக்கும் லாபமோ வருமானமோ இரண்டாம் பட்சமாகத் தான் தெரியும். மேலும் புதிய வீரர்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

இந்தியக் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் சங்கமும் கால்பந்து அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றையெல்லாம் உணர்ந்தால்தான் கால்பந்து ஏன் உலகின் பிரபலமான, மற்றும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள் முடியும். 

சந்தர்பம் கிடைத்தால் அதையும் எழுதுகிறேன்.

கிரிக்கெட் சங்கங்கள் கற்றுக்கொள்ளத் தவறினால் இதுபோல் பல அணிகளும் நிதிநெருக்கடியால் கலைக்கப்படும். பிறகு ஐ.பி.எல் தொடர் மாபெரும் தோல்வியாக முடியும்.

வியாழன், 11 அக்டோபர், 2012

இந்திய சந்தை விற்பனைக்கு?!



அன்னிய நேரடி முதலீடு – இந்திய தேசத்தின் பொருளாதார மந்த நிலையை சீர்படுத்த மத்திய அரசு வகுத்திருக்கும் புத்திசாலித்தமான உபாயம். இந்தியாவைக் காப்பாற்ற இதைவிட்டால் வேறு வழியேயில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அணைவரும் முழங்குகிறார்கள்.
நாடு முழுவதும் இந்த திட்டதிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றது. மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை ஆதரிப்பதும் அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதுமாக இந்திய அரசியல் களம் ஒவ்வொரு நாளும் பரப்பாக இருக்கிறது.

இத்தனை சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அன்னிய நேரடி முதலீடு என்பது என்ன? இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக நுழைந்து சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடலாம். 

அதாவது அவர்கள் பொருட்களை அவர்களே இங்கு நேரடியாக விற்பனை செய்யலாம். உதாரனமாக பல வெளிநாட்டுக் கார் கம்பெனிகளின் தொழிற்சாலைகள் இந்தியாவில் இருக்கிறது. இந்த தொழிர்சாலைகளில் தயாரிக்கப்படும் வாகனங்களை இந்திய சில்லரை வர்த்தகர்கள் அதாவது கார் ஷோரூம் அதிபர்கள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள். இதிலும் ஒரு வர்த்தகர் குறிப்பிட்ட மண்டலத்திற்குள் மட்டுமே விற்பனை செய்யும் உரிமை பெற்றிருப்பார்.
இந்த கட்டமைப்பில், ஒரு வெளிநாட்டு தொழிற்ச்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், அதனை வாங்கி விற்கும் வனிகர், வாடிக்கையாளர் என்று அனைவரும் இந்தியர்களாக இருக்கிறார்கள்.

இப்போது மத்திய அரசு பரிந்துரைக்கும் அன்னிய நேரடி முதலீடு செயல்படுத்தப்படுமானால் இதே நிலை எப்படி இருக்கும்?
வெளிநாட்டு கார்தொழிற்ச்சாலைகளின் ஊழியர்கள் இந்தியர்கள். அங்கு தயாரிக்கப்படும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் வெளிநாட்டவர். அந்த கார்களை வாங்குவது இந்திய மக்கள்.
அதாவது ஒரு காரை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் வெளி நாட்டவர். அங்கு பணிபுரிவதும் அதனை வாங்குவதும் இந்தியர்கள். இந்த நிலையை எங்கோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதா?

கிட்டத்தட்ட 300 ஆண்டுகாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் இப்படித்தான் இருந்தோம். நமது நிலத்தில் விளையும் பொருட்களையும் கொடுத்துவிட்டு அவர்களுக்குக் கப்பமும் கட்டிக்கொண்டிருந்தோம். இதே நிலையைத்தான் மீண்டும் ஏற்படுத்தப்பபோகிறார்கள். இந்தியக் குடியரசின் மகத்தான சாதனை இது.

நம் நாட்டினுடைய எதிர்காலத்தையே சீர்குலைக்கக்கூடிய இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது?

இதற்கு பதில் நம் நாட்டு சூழ்நிலையைப் பொருத்தது அல்ல. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நிலையை ஒட்டியே இந்தியாவில் இந்த திட்டதிற்க்கான செயல்பாடுகள் தீவிரமாக இருக்கின்றன.

அமெரிக்க பொருளாதார நிலை நம்மை விட மோசம். வரலாறு கானாத அளவு வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலும் விரைவில் வரவிருப்பதால் ஒபாமா ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். 

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்ட ஒபாமாவின் அரசு வகுத்திருக்கும் திட்டம்தான் இந்தியச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் நேரடி சில்லரை வர்த்தகம்.அதாவது அவர்களது பொருட்களை நம் சந்தையில் விற்பதன் மூலம் அவர்களது சந்தையையும் லாபத்தையும் பெருக்கிகொள்ளலாம்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இதற்காகத்தான் இந்திய அரசாங்கம் இவ்வளவு மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறது. 

இவற்றையெல்லாம் கூட சகித்துக்கொள்ளாலாம். ஆனால் இந்திய அரசு இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் என்று சொல்பவைதான் மக்களை ஏமாற்றுவதாக இருக்கிறது.

அன்னிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக சில்லரை வர்த்தகம் செய்தால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை அதிகமாகக் கிடைக்கும் என்பது அர்சாங்கத்தின் வாதம். காரணம் இந்திய விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்ய அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. அதனால் அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிக கொள்முதல் விலை கிடைக்கும். நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தலைசிறந்த பொருளாதார நிபுனர்களால் நடத்தப்படும் இந்திய அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது.
இந்த திட்டத்தின் மற்றொரு பயனாக சொல்லப்படுவது இந்திய வாடிக்கையாளார்களுக்கு பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது. இது மேலே சொன்ன கருத்துக்கு முற்றிலும் முரனானது. ஒரு பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து அதையே குறைந்த விலைக்கு விற்க அந்த நிறுவனங்கள் என்ன மூடர்களா?

விவசாயப் பொருட்களின் நிலை இப்படியென்றால் மற்ற பொருட்களின் நிலையில் பெரிய வித்தியாசமில்லை. மிகப்பெரிய பணபலம் கொண்ட இந்த நிறுவனங்கள், எந்தப் பொருளையும் அதிக எண்ணிக்கையில் மொத்தமாக கொள்முதல் செய்யும் வலிமையை பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட மொத்தக் கொள்முதல் செய்யும்பொழுது, பொருட்களின் விலையும் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்குக் கிடைப்பதைவிட மிகக்குறைவாக இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைத்துவிடுகின்றன. 

உதாரணமாக, ஒரு இந்திய வர்த்தகர், ஒரு கம்பெனியின் சோப் ஒன்றை 30 ரூபாய்க்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சோப்பின் சந்தை விலை 45 ரூபாய் என்று அதன் உற்பத்தியாளர்களால் நிர்னயிக்கப்பட்டிருக்கிறது. நம் வர்த்தகர் இந்த சோப்பை ரூ.30 க்கு வாங்கி 45 ரூபாய்க்கு விற்றால் அவருக்குக் கிடைக்கும் லாபம், ஒரு சோப்பிற்கு ரூ.15. இவருக்கு சலுகையாக அந்த சோப்பைத் தயாரிக்கும் கம்பெனி அதிகபட்ச்சமாக ஒரு சோப்பிற்க்கு 5 அல்லது 10 சதவிகிதம் தள்ளுபடி தரும். அதாவது ரூ.3 அல்லது 6 குறைத்துக் கொடுக்கும். இவரது கொள்முதல் அளவு அவரது சந்தையின் தேவையைப் பொருத்து இருக்கும். 100 அல்லது 200 என்ற எண்ணிக்கையிலேயே கொள்முதல் செய்வார்.

ஆனால் இதே வர்த்தகத்தில் அன்னிய நிருவனங்கள் நுழையும்போது என்ன நடக்கும்? நம் நாட்டு வனிகர்கள் 100. 200 என்று கொள்முதல் செய்யும் பொருட்களை இந்த நிறுவனங்கள் மொத்தமாக ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்யும். இத்தைகைய மொத்தக் கொள்முதல் செய்யும்பொழுது உற்பத்தியாளர்களும் அதிகமான சலுகைகள் கொடுப்பார்கள். அதாவது, மேலே சொன்ன அதே சோப்பு தயாரிக்கும் கம்பெனி இந்த நிறுவனங்களுக்கு ஒரு சோப்பை ரூ.20 என்ற விலையில் கொடுக்கும். இதனால் அந்த நிறுவனதுக்குக் லாபம் குறைந்தாலும், 10 இந்திய வனிகர்களிடம் செய்ய வேண்டிய வியாபாரத்தை ஒரேயொரு நிறுவனத்திடம் செய்துவிடுகிறார். எப்படிப்பார்த்தலும் இந்த உற்பத்தியாளருக்கு லாபம்தான்.

இப்படி உள்நாட்டு வர்ததகர்களை விட குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ரூ.45 க்கு விற்க்கப்படும் அதே சோப்பை, இவர்கள் ரூ.40 க்கு விற்பார்கள். இதில் இந்திய நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட முடியாது.

இதனால் இந்திய மக்களுக்கு லாபம்தானே? பொருட்கள் மலிவாகக் கிடைக்கின்றன என்று சொல்பவர்கள் அவசரப்படாதீர்கள்.

வந்த புதிதில் இப்படி குறைவாகக் கொடுத்தாலும், நாட்கள் செல்லச்செல்ல இவர்களது சந்தை பெருகும்பொழுது இவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை உருவாகிவிடாதா? இவர்களே உற்ப்பத்தியிலும் இறங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இவையெல்லாம் மேம்போக்காக பார்க்ககும்போது தெரிபவைதான். இந்த திட்டத்தை செயல்படுத்தும்பொழுது இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களும் பாதிப்புகளும் ஏற்படும்.

இத்தகைய அபாயகரமானதொரு திட்டத்தை, இந்தியாவின் எதிர்காலத்தையே சீர்குலைக்கக்கூடியவொரு முயற்சியைத்தான் இந்திய அரசாங்கம் செயல்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கிறது.
இனி இந்த விவகாரத்தின் முடிவு மக்கள் கையிலிருக்கிறது. இந்த மக்களை மீறி அரசு இதனை அமல்படுத்துமேயானால், அதுவே இந்தியாவின் வீழ்சிக்குத் தொடக்கப் புள்ளியாக அமையும்.