banner

செவ்வாய், 9 அக்டோபர், 2012

சினிமா சுவை


.
இந்திய சினிமா நூறாண்டுகளையும், தமிழ் சினிமா 75 ஆண்டுகள் என்ற மைல்கல்களையும் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலத்தை இந்த சினிமா எப்படிக் கடந்து வந்தது என்பது நமக்குக் கவலையில்லை. ஆனால் இத்தகைய சாதனையைச் செய்திருக்கும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? இதைப் பற்றி என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதே இந்தப் படைப்பின் நோக்கம்.

அதோடு மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் புதுமையான, சுவையான திரைப்படங்கள் பற்றியும் பார்க்கலாம். ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்னயிக்கும் பல்வேறு விஷயங்களைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதப்போகிறேன்.

சினிமா விமர்சனம் தானே என்று நினைக்கிறீர்களா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஒரு படத்தின் விமர்சனம் மட்டுமல்லாமல், அந்தப் படத்தின் சுவையை உங்களுக்கு ஊட்டுவதே என் நோக்கம். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியான சுவையான படங்களைப் பற்றி எழுதப்போகிறேன்.
இவற்றைப் பற்றியெல்லாம் பேசும் முன்பு நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.
முதலில் நல்ல திரைப்படம் என்பது எது. அதனை கண்டறிய ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா?

இன்றைய தேதியில் ஒரு படம் நல்ல படம் என்று எப்படி சொல்லப்படுகிறது?

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு திரைப்படம் வெளியாகி முதல் காட்சி முடியும் முன்பே அதனைப் பற்றிய செய்தி உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று அனைத்து ஊடகங்ளிளும் விளம்பரம் செய்யப்படுவது மட்டுமல்லாது, அத்திரைப்படம் வெளியான ஒரு வார காலத்திற்க்கு இந்த ஊடகங்களின் விமர்ச்னப் பொருளாகவும் ஆகிவிடுகிறது. பெரும்பாலும் இந்த ஊடகங்களின் கருத்துப் படியே படங்கள் நல்ல படங்களாக வரையறுக்கப்படுகின்றன.

உண்மையில் ஒரு படம் நல்ல படமா என்பதை தீர்மானிக்க வேண்டியது ரசிகர்கள்தான். ஆனால் இன்று பல படங்கள் ரசிகர்களிடம் போய்ச் சேர்வதில்லை.அல்லது சரியாக சேர்க்கப் படுவது இல்லை. இந்த ஊடகங்களால் பாராட்டபடும் படங்களே மக்களிடம் சிறந்த படம் என்று சேர்க்கப்படுகிறது. இந்தப் படங்களை மக்கள் அணைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது இல்லை. இப்படி இவர்களால் சிலாகிக்கப்பட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிப்படங்களாக எடுத்துக்கொள்ளாப்படவில்லை.

அப்படியானால் நல்ல படம் என்பது எது?

மனிதனின் உணர்வை தொடக்கூடிய, தூண்டக்கூடிய எந்தவொரு படைப்புமே நல்ல படம்தான். அது எந்த உணர்ச்சியாகவும் இருக்கலாம். காதல், கோபம், வீரம், சோகம், மகிழ்ச்சி என்று எந்த உணார்வையும் தரக்கூடிய படங்கள் அணைத்தும் நல்ல படம்தான்.
ஆனால் இன்று பெரும்பாலும் சோகத்தையும் பரிதாபத்தையும் தரும் படங்களையே சிறந்தவை என்று படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னிருத்துகின்றனர். அது உண்மையல்ல. ஒரு ரசிகன் படம் பார்க்கும்பொழுது தன்னை மறந்து எந்தவொரு உணர்வைப் பெற்றாலும் அது நல்ல படைப்புதான்.

ஒரு காதல் படமென்றால் அந்த காதலன் மீதோ காதலி மீதோ நமக்கும் காதல் வர வேண்டும். இப்படிப்பட்ட ஒரு காதலனோ காதலியோ நமக்கு கிடைப்பார்களா என்று ஏங்கி உருக வேண்டும். ஆக்‌ஷன் படமென்றால் நாயகன் அல்லது நாயகியின் கோபம் நமக்குள்ளும் இறங்க வேண்டும். திரையில் அவன் செய்வதைப் திரையில் அமர்ந்து பார்க்கும் நமக்கும் வீரம் வர வேண்டும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் ஜாக்சன் துரையை பார்த்து கம்பீரமாகப் பேசும்பொழுது அவரது வீரமும் சுதந்திர வேட்கையும் நம்முள் இறங்கியதால்தான் அந்தப் படம் இன்றும் காலம் பல கடந்த காவியமாக இருக்கிறது.

அண்ணாமலை படத்தில் ரஜினியின் நண்பர் அவருக்கு செய்த துரோகம் நமக்கு இழைக்கப்பட்டது போல் அந்த வலியை நாம் உணர முடிந்ததால்தான் அது ஒரு வெற்றிப் படமாகவும், ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

மௌன ராகம் படத்தில் கார்த்திக்கின் குறும்பும் துடிப்பும் நம்மை புத்துணர்வுகொள்ளச் செய்யும் வகையில் அமைந்ததால்தான் கதையில் அவர் மரணமடைந்தபோது ரேவதியின் வேதனையை நம்மால் உணர முடிந்தது. 

இப்படி எந்தவொரு படைப்பாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட உணர்ச்சியை ரசிகனும் உணரும்பொழுது தான் அது ஒரு சிறந்த படைப்பாகவும், வெற்றிப் படமாகவும் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறது.
ஒரு திரைப்படம் எடுப்பது என்பது சாப்பாடு சமைப்பது போன்றது. சாப்பாட்டில் எப்படி உப்பு, புளிப்பு, காரம் என்று பல சுவைகள் கலந்து செய்யப்படும்போது, ஏதேனும் ஒரு சுவை மிகைப்பட்டலோ குறைந்தாலோ அதன் சுவை கெட்டுவிடுமோ அதுபோல ஒரு திரைப்படத்திலும் ஏதெனும் ஒரு உணர்ச்சி அதிகமானால் அதன் சுவையும் கெட்டுவிடும்.

அப்படியானால் ஒரு சுவையான சினிமா எடுக்க என்னென்ன தேவை?

அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன்.

2 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது..தொடந்து எழுதுங்கள்!
    (ஒரு சின்ன வேண்டுகோள்- உங்கள் டெம்ப்ளேட்டை மாற்றுங்கள்,படிக்க சிரமமாக உள்ளது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னபடியே டெம்ப்லேட்டை மாற்றிவிட்டேன். தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து கருத்துக்களை வழங்க வேண்டும். நன்றி.

      நீக்கு